Singhara - An interesting fruit

அஜ்மீர் இரயில் நிலையத்தின் முன்னால் காளையின் முகம் போன்ற அமைப்பில் இருந்த சிங்ஹாரா ( Singhara)  என்ற இந்த பழத்தைப் பார்த்ததுமே அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. விலை என்ன என்று கேட்டால் ஆச்சரியம். கிலோ வெறும் 15 ரூபாய் தான். ஒன்றை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தேன். தேங்காய் முளைக்கும் போது தேங்காய் மூடிக்குள் உருவாகும் பஞ்சு போன்ற உணவுப் பொருளின் (எங்கள் ஊரில் புங்கு என்று சொல்வார்கள்) சுவையைப் போல இருந்தது. சிறந்த மருத்துவ குணமும் குறைந்த விலையும் இந்த பழத்தினை பற்றி மேலும் அறிந்துகொள்ள தூண்டியது.

இந்த பழமானது ஆகாயத்தாமரை போன்று தண்ணீரில் மிதக்கும் ஒருவகையான தாவரத்திலிருந்து கிடைக்கிறது. தாவரத்தின் வேர்பகுதியில் பழமாக உருவாகிறது. இது பச்சை, ஊதா, கறுப்பு என பல நிறங்களில் கிடைக்கிறது. இதன் மெல்லிய தோலை நீக்கியவுடன் வெள்ளை நிறத்தில் கிடைக்கும் உணவுப்பொருள் மிகவும் சத்துள்ள உணவுப் பொருள். கார்போஹைட்ரைட் நிறைந்துள்ளது. 100 கிராம் சிங்ஹாரா வில் 730 கலோரி ஆற்றல் இருக்கிறது. அதிக தண்ணீர் சத்து, 14.5 கிராம் நார்சத்து , மிகவும் குறைவான கொழுப்பு (0.2 கிராம்).

இது மழைக்காலம் முடிந்தபின் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் காய்க்கும். உடலில் உள்ள சிலவகையான நச்சுப் பொருளை வெளியேற்றுகிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கு பரிந்துரைக்கப் படிகிறது. தண்ணீருக்குள் உருவாகி அதிக தண்ணீர்ச் சத்தோடு இருக்கும் இந்த சிங்ஹாரா வட இந்தியாவில் பிரபலம். ஆனால் தென்னிந்தியாவில் கேள்விப் பட்டதில்லை. 5 அடி தண்ணீர் இருக்கும் குளங்களில் கூட பரந்து காணப்படும் இந்த தாவரம் தமிழ்நாட்டு சூழலிலும் வளருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த தாவரத்தை எவ்வாறு அங்கு கொண்டு வருவது என்று தான் தெரியவில்லை.







Previous Post Next Post