எண்டோசல்பானை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கவேண்டும்.


     எண்டோசல்பான் என்பது ஒரு வகையான பூச்சிக்கொல்லி மருந்து. சமீப காலமாக, எண்டோசல்பான் என்ற பெயர், பத்திரிக்கைகளில் அடிக்கடி இடம் பெறுகின்றது. இது மனிதர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடியாத சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. தாவரங்கள், பூச்சிகள், பேக்டீரியாக்கள், பூஞ்சைகள் ஆகியவைகள் இயற்கையின் அங்கங்கள். சில வகை பூச்சிகள் தவரங்களுக்கு நன்மை செய்கிறது.

      சில வகை பூச்சிகள் தவரங்களுக்கு அழிவினைத் தருகிறது. சில பூச்சிகள் தாவரங்களில் புகுந்து அதன் இலைகள், பூக்கள், காய்களைத் தின்று வாழ்கிறது. இத்தகைய பூச்சிகளை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இந்தியா போன்ற விவசாயத்தை நம்பி வாழும் நாடுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து என்பது தவிர்க்க முடியாத நிலை உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தினால் மட்டுமே அதிக விளைச்சலை பெற இயலும் எனும் நிலையே இங்கு உள்ளது.
     பூச்சிக்கொல்லி இரண்டு வகைப்படும். இயற்க்கை பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயன பூச்சிக்கொல்லிகள். நமது நாட்டின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய வளர்ச்சிக்கு முழு அக்கறை செலுத்தப்பட்டது. பாசன வசதிகள் பெருக்கப்பட்டன. விதைப்பண்ணைகள் உருவாக்கப்பட்டன. உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் விவசாயத்தை ஒரு பாடமாகவே கற்றுத்தர முயற்சிகள் தொடங்கின. விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயக் கல்லூரிகளும், செயல்விளக்கப் பண்ணைகளும் ஏற்படுத்தப்பட்டன. வேளாண்விரிவாக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், கடன் வசதி ஆகியவை ஒருங்கே கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விவசாயிகளின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. விவசாயப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய மார்க்கெட் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்றை மட்டும் விட்டு விட்டனர். ஆம் இயற்க்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி இயற்க்கை வேளாண்மையை மேம்படுத்த தவறிவிட்டனர்.
     மடக்கி உழவு, பசுந்தழை உரம், பசுந்தாள் உரம், மட்கு உரம், மண்புழு உரம் போன்ற இயற்க்கை முறைகளில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தாமல் எண்டோசல்பான்,  பாராடைகுளோரோ பென்சீன், குளோரீன் சேர்ந்த சேர்மங்கள், பாரதையான் போன்ற வேதிப்பொருட்கள் வைத்து தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதால் தற்போதய விவசாயம் இரசாயன உரங்களையே நம்பி உள்ளது. இவை சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் பிரச்சினையையும் கிளப்பியிருக்கிறது. சில வேதிப் பொருட்கள் காய்கறிகளிலுள்ள திசுக்களில் சேர்ந்து மனிதரையும் பாதிக்கக்கூடிய அளவு நச்சுத்தன்மையை அடைகின்றன. இவ்வாறான நச்சுப்பொருட்கள், உணவுச் சங்கிலியில் செறிவடைந்து வருகின்றன.
 எண்டோசல்பான் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள். என்டோசல்பான் சாதாரண வெப்பநிலையிலையே மிக சுலபமாக ஆவியாகி காற்றில் கலந்துவிடும். எண்டோசல்பான் கலந்த காற்றை யாரெல்லாம் சுவாசிக்கின்றார்களோ, அவர்களெல்லாம் பாதிக்கப்படக் கூடிய மனிதர்கள் மற்றும் உயிரினங்கள். இப்பூச்சிக்கொல்லி மருந்து, 150 நாட்களுக்கும் மேலாக அழியாமல் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ள இடங்களில் மழைப் பெய்தால், எண்டோசல்பான் மழை நீரில் கலந்துவிடும். மழை நீர் கலந்த எண்டோசல்பான், மனித நீர் வள ஆதாரங்களான குளம், ஏரி, ஆறு, கடல் என எல்லா இடங்களுக்கும் செல்லும். எவ்வுயிரினங்கள் இந்நீரைக் குடிக்குமோ, அவை எல்லாவற்றுக்கும் எண்டோசல்பான் செல்லும். எண்டோசல்பான் உள்ள உயிரினங்களை, எவ்வுயிரினம் சாப்பிடுகின்றதோ அவ்வுயிரினத்துக்கும் எண்டோசல்பான் செல்லும். உதாரணமாக, எண்டோசல்பானால் இறந்த பூச்சிகளை பறவைகள் சாப்பிட்டால், அப்பறவைகளுக்கும் எண்டோசல்பான் போகும். அப்பறவையை மனிதன் சாப்பிட்டால், மனிதனுக்கும் எண்டோசல்பான் வரும். பறவை முட்டை போட்டால், அம்முட்டையிலும் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து இருக்கும். அதே போன்று, அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,மனிதன் குழந்தைப் பெற்றாலும், பிறந்த குழந்தைக்கும் எண்டோசல்பான் இருக்கும்.
 விவசாயத்தில் பயன்படுத்தப்படும் எண்டோசல்ஃபன் பூச்சி மருந்தால் தீங்கு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டால், அதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கத் தயார் என்று நமது நாட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். எண்டோசல்ஃபன் மருந்தை’ப் போல் பலன் தரக்கூடிய மருந்து வேறு எதுவும் இல்லை. ஆனால், அதனால் பாதிப்பு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டால், அதற்கு தடை விதிக்க தயாராக உள்ளோம். எனினும், அந்த மருந்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். கேரள மாநில மக்கள் காசர்கோடு பகுதியில் எண்டோசல்ஃபன் பூச்சி மருந்தால் ஏற்பட்ட பாதிப்பை ஆதாரத்தோடு எடுத்து கூறியதோடு அந்த மருந்துக்கு கேரள அரசு தடை  விதித்தது.
   கேரளாவில் ஏதோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானத்திலிருந்து உணவுப்பொட்டலம் வீசுவது போல் காசர்கோட் பகுதியில் வானத்திலிருந்து முந்திரித் தோட்டங்களின் மீது பாய்ச்சப்பட்டுள்ளது. விஷத்தை மேலேயிருந்து தூவியது கேரள அரசின் பிளாண்டேஷன் கார்ப்பரேஷன். இது அரசின் கொலைவெறிச் செயல் இல்லாமல் வேறு என்னவாம்?
முத்தளமடா, ஸ்வர்க், காசர்கோடு போன்ற இடங்களில் இப்பூச்சிக்கொல்லி மருந்து ஹெலிக்காப்டர் மூலம் மாம்பழத் தோட்டங்களிலும்  தெளிக்கப்பட்டது. அப்பகுதிகளில் ஏற்பட்ட அதிக அளவிலான நோய்கள், சிறுவர், சிறுமியர் மன வளர்ச்சி குறைபாடு, மன நல குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்புகளால் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அனைவராலும் கவனம் பெற்றது. உயர் நீதி மன்ற உத்தரவிற்கு இணங்க, கேரள அரசாங்கம் 2005 ல் எண்டோசல்பானைத் தடை செய்ததது. இத்தடைக் கேரளாவிற்கு மட்டும் தான். தமிழ்நாட்டிற்கு இல்லை. ஆகவே, எண்டோசல்பான் தங்கு தடை இல்லாமல், தமிழக எல்லையோரப் பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்திற்குக் கிடைத்தது. எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டோருக்கு 50,000 பணம், உயர் நீதி மன்ற உதவியால் அரசாங்கத்தின் மூலம் கிடைத்தது. எண்டோசல்பான் தடை இன்றும் கேரளாவில் நடைமுறையில் உள்ளது.
      கேரளாவில் நடைமுறைப்படுத்தபட்ட தடைச் சட்டத்தை நமது நாட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் செயல்படுத்த ஏன் தாமதிக்கிறார்?. கேரளாவில் ஏற்பட்ட பாதிப்புக்கள் அதை தடை செய்ய போதுமான ஆதாரம் ஆகாதா? பல ஆயிரம் உயிரிழப்பு ஏற்பட்டால் தான் அதை ஆதாரமாக எடுத்துக்கொள்வார்கள். எண்டோசல்பான் மரபணுக்களை மாற்றக்கூடிய தன்மையை உடையது என்பதை ஆதாரப்பூர்வமான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. டெரடோஜென் என சொல்லத்தக்க வகையில், அது பிறக்கும் குழந்தைகளை குறைபாடுடன், நோயுடன் பிறக்க வைக்கின்றது. எண்டோசல்பான் புற்று நோய் உண்டாக்குவதற்கு விஞ்ஞானரீதியில் ஆய்வுகள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கமோ அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களோ எண்டோசல்பான் பற்றிய தெளிவான், விரிவான ஆய்வுகளை ஏன் மேற்கொள்ள வில்லை? என்ற கேள்வி தவிர்க்க இயலாததாக உள்ளது. தற்போதுள்ள மனிதர், யாவர்க்கும் மக்கள் நலமோ, மனித நலமோ முக்கியமில்லை, பண நலமே முக்கியம்.
     கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தால் ஏற்பட்ட துயரங் கள் தொடர்கின்றன. 1995ம் ஆண்டு முதல் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தொடர்ந்து தெளித்ததன் மூலம் 500 உயிர்கள் பறிக்கப்பட் டுள்ளன என்று அதிகாரப்பூர்வ கணக்கு தெரிவிக்கிறது. 1970களுக்கு பிறகு என்று கணக்கிட்டால் சுமார் 4 ஆயிரம் பேர், எண்டோசல்பான் தெளிக்கும்போது அதை சுவாசித்த தால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. இந்த பூச்சி மருந்தை பயன்படுத்தி பிறகு அதன் தொடர்விளைவால் இன்றைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் துயரத்தை அனுபவித்து வரு கிறார்கள். 9 ஆயிரத்திற்கும் அதிக மான மக்கள் செவித் திறனை இழந் திருக்கிறார்கள்; உடல் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி எண்டோசல்பான் பூச்சி மருந்து கலந்ததால் மண் ணும், நீரும் விஷமாக மாறியிருக் கிறது. இந்த மண்ணில் விளையும் உணவுப் பொருட்கள் மனித உட லில் பெரும் பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும் அபாய மும் உள்ளது.
      ஆனால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் இந்த மருந்துக்கு தடை விதிப்பதை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மிகச் சிறந்த பூச்சிக் கொல்லியான இந்த மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டால் தங்கள் நாட்டு விவசாயமே அடியோடு பாதிக்கப்படும் என இந்த நாடுகள் கூறுகின்றன. இதனால் இந்த மருந்துக்குத் தடை விதிக்க மத்திய அரசு  எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. உலகில் 70 சதவீத எண்டோசல்பான் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மிச்சமுள்ள 30 சதவீதத்தை பிரேசிலும் இஸ்ரேலும் தயாரிக்கின்றன. இந் நிலையில் இந்த மருந்தை ஒழித்துக் கட்டிவிட்டு, தங்கள் நாட்டு விலை உயர்ந்த மருந்துகளை வளரும் நாடுகளின் தலையில் கட்ட ஐரோப்பிய நாடுகள் முயல்வதாகவும், இதனால் தான் இந்த மருத்துக்கு தடை விதிக்க முயல்வதாகவும் இந்திய எண்டோசல்பான் மருந்து உற்பத்தியாளர்கள் புகார் கூறுகின்றனர்.
எண்டோசல்பான் மருந்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான். ஆனால், அந்த நிறுவனம் இப்போது இந்த மருந்தை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. காரணம், அந்த நிறுவனத்தைவிட விலை குறைவாக இந்தியா இந்த மருந்தைத் தயாரிப்பது தான். இப்போது அந்த நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. ஒரு லிட்டர் எண்டோசல்பானில் விலை ரூ. 286 ஆகும். ஆனால், இதற்குப் பதிலாக ஐரோப்பிய நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்தின் விலை லிட்டர் ரூ. 2,000ல் இருந்து ரூ. 13,000 வரை இருக்கும் என்கிறார்கள்.
     ஒரேயடியாக இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துக்கு முழுக்குப் போடாமல் இப்படியாகப் படிப்படியாக குறைத்துக் கொள்ளும் முடிவுக்குச் செல்ல இந்தியாவுக்கு வேறுசில காரணங்களும் இருக்கின்றன. இதற்கான முழுமுதற் காரணம், வேறு மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகளை இந்தியா உருவாக்கவில்லை. இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாத விவசாயத்துக்குப் புதிய தலைமுறை விவசாயிகளைப் பழக்கவும் இல்லை.
இந்தியாவில் மூன்று நிறுவனங்கள் எண்டோசல்பான் தயாரிப்பில் உள்ளன. இவை ஆண்டுக்கு 9,000 டன் எண்டோசல்பான் மருந்தைத் தயாரிக்கின்றன. இதில் பாதி அளவு இந்திய விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. மீதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,340 கோடி. தற்போது இந்த மருந்தைத் திடீரென்று தடைசெய்து நிறுத்திவிட்டால், இந்தியாவில் இதை நம்பியிருக்கும் 75 விழுக்காடு விவசாயிகளுக்கு மாற்றுப் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காது என்று இந்தியா கருதுகிறது.
     எண்டோசல்பான் எனும் இரசாயணத்தைச் சேர்த்த பூச்சிக் கொல்லி மருந்தைப் பயன்படுத்தியதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, எண்டோசல்பான் கலக்கப்பட்ட பூச்சி மருந்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந் நிலையில் எண்டோசல்பானுக்கு தடை விதிப்பதில் பிரதமர் மன்மோகன் சிங் மெத்தனமாக செயல்படுவதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், எண்டோசல்பான் பூச்சி மருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கண்களைக் மூடிக்கொண்டுள்ளது. அந்த மருந்துக்கு தடை விதிக்க உடனடியாக அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும். ஹார்மோனை பாதிக்கச் செய்வதால், பாதிக்கப்பட்ட ஆண்களால் உருவான குழந்தைகள் அங்க ஊனத்துடன், வளர்ச்சியின்றிப் பிறக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்திய அரசு இந்த பிரச்சனைக்கு தக்க நடவடிக்கை எடுத்து எண்டோசல்பானை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கவேண்டும்.
Previous Post Next Post