அந்த பள்ளியில் இருக்கும் நண்பரை பள்ளிக்கூட
வாசலில் பார்த்துவிட்டு ஐந்து நிமிடத்தில் திரும்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த பள்ளியின் வாசலில் சென்று பார்த்த பின்பு அந்த பள்ளியின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. தாஜ்மகாலில் பதிக்கப்பட்ட பளிங்கு பாறைகள் வெட்டியெடுத்த அதே குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பளிங்குக் பாறைகளால் அந்தப் பள்ளியும் செதுக்கப் பட்டிருந்தது. பிரமாண்டமாக இருந்த அந்த பள்ளியின் செயல்பாடுகளை பார்க்கவேண்டும் போல இருந்தது.
ஞாயிற்றுகிழமையாக இருந்ததால் பள்ளிக்கு விடுமுறையாக இருந்தது. பள்ளிக்குள் நுழைந்த உடன் ஒரு காட்சி. அங்கு பரந்து கிடந்த மரங்களில் பறந்து திரிந்த பறவைகளை சில மாணவர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பறவைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் (Bird watching) என்றனர். காலையில் யாருடைய கட்டாயமும் இல்லாமல் பறவைகளை இரசித்துக் கொண்டிருந்த நிகழ்வு அருமை.
பள்ளியின் முகப்பு
கட்டிடம் முகலாய ,கிறிஸ்தவ, புத்தமத , ஜைனர் ஆகியோர்களின் கட்டிடக் கலைகளை
பிரதிபலிப்பதாக இருக்கிறது. 1875 ல் கட்டப்பட்ட கட்டிடம் இன்றும் பொலிவு குன்றாமல் பளபளவென்று பளபளக்கிறது. பள்ளியினுள் கிருஷ்ணர் கோவில் இருக்கும் இடத்திற்கு அருகே மருத்துவமனை. அதனைத் தொடர்ந்து ஒரு அழகான ஒரு தோட்டம். பூஞ்செடிகளில் பூக்கள் பூத்துக் கிடக்க சுற்றிலும் பழம் தரும் மரங்கள். அதனைச் சுவைக்க ஏராளமான பலவண்ணங்களில் பறவைகள்.
அதற்கு அருகில் ஆசிரியர்கள் தங்கும் அறை. தொடர்ந்து போலோ விளையாடுவதற்கான ஆடுகளம். இந்தியாவில் போலோ விளையாடுவதற்கான ஆடுகளம் உள்ள ஒரே பள்ளி இது தான் என்று
கூறினார்கள். குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க தனி இடம் இருக்கிறது. 52 குதிரைகள் இந்த பள்ளியில் வளர்க்கப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சில குதிரைகள் முரட்டுக் குதிரைகள். மாணவர்கள் இந்த குதிரையில் ஏறி பயிற்சி பெறுகின்றனர். தொடர்ந்து கிரிக்கெட் தவிர அனைத்து வகையான விளையாட்டு மைதானங்களும் இருக்கின்றன.மைதானங்களில் தினமும் பயிற்சி பெறுகின்றனர்.
சூரிய சக்தியில் இயங்கும் மோட்டாரினைப் பயன்படுத்திப் பள்ளிக்கு தேவையான தண்ணீரினை பூமியிலிருந்து எடுக்கின்றனர். இந்தியாவின் வரைபடத்தை ஒரு மைதானம் முழுவதும் பல்வேறு வண்ணங்களில் வரைந்திருந்தனர். அதன் அருகே எப்போது சென்று பார்த்தாலும் சரியான நேரத்தைக் காட்டும். 1875 ல் செய்யப் பட்ட ஒரு உலகக் கடிகாரம்
கூட இருக்கிறது. இதன் மூலம் உலகின் எந்த நாட்டு நேரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த கட்டிடம் அருங்காட்சியகம். அறிவியல், கலை, வரலாறு, பொருளாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் பொருட்களை சேமித்து வைத்திருக்கின்றனர். ஐந்து மாடிக் கட்டிடத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சிப் பொருட்கள் மாநில அருங்காட்சியகத்தில் இருக்கும் பொருட்களை விட அதிகமாக உள்ளது. அனைத்து வகையான பதப்படுத்தப் பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள், சிந்து சமவெளி, ஹரப்பா நகரங்களில் கிடைக்கப் பெற்ற பொருட்கள், சில வகை அரிய கற்கள், உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட போர்கருவிகள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் பயன்படுத்தப்பட்ட போர்கருவிகள் போன்றவைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிறு தூசி கூட படியாமல் பத்திரமாக பாதுகாக்கப்படும் இந்த இடத்தில் காணப்படும் பொருட்கள் நிஜமாகவே காணக்கிடைக்காத பொக்கிஷங்கள். இராஜஸ்தான் வீட்டின் மாதிரியையும்
செய்து வைத்திருக்கின்றனர். கடந்து போன நினைவுகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதம்
அழகு.
அதன் அருகில் கலைக் கூடம். சிலைகள் செய்யும் இடம், டெராக்கோட்டா செய்யும் இடம், மரத்தின் மூலம் சிலைகள் செல்லும் இடம், என கலைகளின் பிறப்பிடமாக அந்த இடம் உள்ளது. விதவிதமான பளிங்கு கற்கள் இங்கு கிடைப்பதால்
மார்பிள் கற்களில் இருந்து சிலை செய்யும் பகுதியும் இருக்கிறது. 100 நாடுகளில் இருந்து
எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு உருவான நினைவுச்சின்னம் ஒன்றும் இங்கே இருக்கிறது.
வகுப்பறையைச் சென்று பார்தால் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட்ட கணினி அறை. நான்கு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை smart வகுப்பறையாக உள்ளது. ஒவ்வொரு வகுப்பறையிலும் தொடுதிரையுடன்
கூடிய புரெஜெக்டர் இருக்கிறது.
தனியாக கணினி அறை இருக்கிறது.
ஏராளமான மரங்கள் இருந்தாலும்
சுற்றுப் புறத்தை தூய்மையாகவே வைத்திருக்கின்றனர்.இப்படி இந்தப் பள்ளியைப் பற்றி சொல்லிக்கொண்டே
போகலாம்.
இன்று புதியதாக உருவாகும் பள்ளிகள் தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருக்கும். ஆனால் கலைகளை கற்றுத்தருவதிலும், பாரம்பரியத்தை பேணுவதிலும்,
வரலாற்று நிகழ்வுகளை பேணிக்காப்பதிலும், விளையாட்டில் அக்கரை காட்டுவதிலும் சிரத்தை
எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒரு பள்ளி எப்படி இருக்கவேண்டும் என்று நான் கற்றுக்கொண்ட
இலக்கணங்கள் இப்பள்ளிக்கு பொருந்துகிறது. நான் பார்த்த மிகச் சிறந்த பள்ளிக்கூடங்களில்
இதுவும் ஒன்று. அது தான் இராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீரில் அமைந்திருக்கும் Mayo College. (College என்பது பெயரில் மட்டும் தான். அது நான்கு
முதல் 12 வகுப்பு வரை உள்ள ஒரு பள்ளிக்கூடம்.)