சில வருடங்களுக்கு முன் பேருந்தின் வாசனை அறியாத ஊர் ஒன்றிலிருந்த
பள்ளிக்கு சென்றிருந்தேன். ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் நிழல் உருவாகும்
விதம் பற்றி படித்துக் கொண்டிருந்தனர். மெழுகுவர்த்தியை
பயன்படுத்தி பென்சிலின் நிழலை சுவற்றில் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
எனது
பையில் ஒரு ஆப்பிள் இருந்தது. அந்த ஆப்பிளை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து இந்த ஆப்பிளையும் அதன் நிழலையும் ஒரே நேரத்தில் உங்களால் சாப்பிட
முடியுமா? என்றேன். ஒரு பொருளையும் அதன் நிழலையும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியுமா?
என அனைத்து குழந்தைகளும் யோசித்துக் கொண்டிருக்க ஒரு மாணவன் மட்டும் அந்த ஆப்பிளை
எடுத்து சுவருக்கும் மெழுகுவர்த்திக்கும் இடையில் வைத்தான். ஆப்பிளின்
நிழல் சுவரில் கிடைத்தது. அப்படியே வைத்து ஆப்பிளை கடித்து சாப்பிடத் தொடங்கினான்.
ஆப்பிள் காலியாக
நிழலும் காலியாகிக் கொண்டிருந்தது. அவன் ஆப்பிளையும் அதன் நிழலையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டுக்
கொண்டிருந்தான். நான் இரசித்த வகுப்பறையில் இதுவும் ஒன்று.
படிக்கும்
பாடம் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப் படும்போது தான் கற்றல் நிகழ்வு எளியதாகிறது.
