சிறுவனும் மாமரமும்

"சுயநலம் சிறிதும் இல்லாத ஒரு வடிவம் தான் அம்மா."



நீண்ட நாட்களுக்கு முன்னர் ஒரு பெரிய மாமரம் ஆற்றின் ஓரத்தில் இருந்தது. ஒரு சிறுவன் தினமும் அந்த மரத்தடிக்கு வந்து விளையாடி விட்டு செல்வான். அவன் மரத்தின் ஒவ்வொரு கிளைகளிலும் ஏறி விளையாடுவான். மரக்கிளையில் நிற்கும் மாம்பழங்களை பறித்து சாப்பிடுவான். அந்த மாமரத்தை சிறுவன் மிகவும் நேசித்தான். மாமரமும் அவனிடம் மிகுந்த பிரியமாய் இருந்தது. காலங்கள் கடந்தது. சிறுவன் சிறிது வளர்ந்துவிட்டான். அவனை பெற்றோர்கள் பள்ளியில் சேர்த்தனர். பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அவனால் தினமும் மாமரத்தடிக்கு வந்து விளையாட முடியவில்லை.

          வார விடுமுறை நாட்களில் மட்டுமே மாமரத்தடிக்கு வருவான். ஒரு நாள் சிறுவன் மரத்தடிக்கு வந்த போது அவன் சோகமாக இருப்பதைக்கண்ட மரம் தன்னோடு விளையாடுமாறு கேட்டது. தான் வளர்ந்து விட்டதால் இனி மரத்தைச் சுற்றி விளையாட கூடாது என்றும் வீட்டில் பொம்மைகளோடு தான் விளையாட வேண்டும் என்றும். பொம்மை வாங்க காசு தேவைப் படுகிறது என்றும் தன்னிடம் காசு இல்லாததால் வருத்தமாக இருப்பதாகவும் கூறினான். அதற்கு மரமானது தன்னிடம் பணம் இல்லை. என்னிடம் தொங்கும் மாம்பழங்களை பறித்து அதை விற்று கிடைக்கும் பணத்தில் பொம்மை வாங்கிக்கொள் என்றது. சிறுவனும் மரத்தில் நின்ற மாம்பழங்களை எல்லாம் பறித்துவிட்டு மகிழ்ச்சியோடு சென்றான். அதன்பின் சிறுவன் நீண்ட காலமாக மாமரதின் அடியில் விளையாடுவதற்க்கு வரவில்லை. மாமரமும் சிறுவன் வருவான் என காத்து இருந்தது. சிறுவன் திரும்ப வரவேயில்லை.
          பதினைந்து வருடங்களுக்குப் பின் அந்த சிறுவன் மீண்டும் அந்த மாமரத்தின் அடியில் வந்தான். தற்போது அவன் சிறுவனில்லை. இளைஞனாக வளர்ந்திருந்தான். தூரத்தில் அவன் வரும்போதே அவனை அடையாளம் கண்டுகொண்ட மாமரமானது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. ஆனால் அருகில் வந்த போது அவன் முகம் கவலையுடன் இருப்பதைக் கண்டு கலங்கியது.
          தன் கிளைகளில் ஏறி விளையாடுமாறு கூறியது. தனக்கு விளையாடுவதற்க்கு நேரமில்லை என்றும் தன் குடும்பத்திற்காக அதிகமாக உழைக்க வேண்டும் என்றும் அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்க்கு ஒரு வீடு கட்டவேண்டும் என்றும் கூறினான். தன்னிடம் பணம் இல்லாத்தால் தன்னிடம் இருக்கும் கிளைகளையெல்லாம் வெட்டிச் சென்று  அவன் வீட்டைக் கட்டுமான பணிக்கு பயன்படுத்துமாறு மரம் கூறியது. இளைஞனும் மகிழ்ச்சியுடன் மரத்தை வெட்டி கட்டுமான பணிக்கு எடுத்துச் சென்றான். மரமும் மகிழ்ச்சி அடைந்தது. அதன்பின் இளைஞன் மீண்டும் அந்த மரத்திடம் மீண்டும் நீண்ட காலமாக திரும்பி வரவில்லை. மரமும் தனியாளாய் நின்று எப்போதாவது இளைஞன் திரும்பி வருவான் என்று காத்துக்கொண்டிருந்தது.
          பல வருடங்களுக்கு பின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த ஒரு கோடை காலத்தில் அவன் திரும்பவும் மரத்தின் அடியில் வந்தான். இப்போது அவன் வயதாகி இருந்தான். அவனைக் கண்டதும் மரம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.  தன்னுடன் வந்து விளையாடுமாறு அழைத்தது. வயதாகி இருப்பதால் தனக்கு விளையாட முடியாது என்றும் தான் வெயிலின் கொடுமையிலிருந்து ஒரு தீவில் ஓய்வெடுக்க போவதற்க்கு ஒரு படகு தேவைப்படுகிறது என்று கூறினான்.  உடனடியாக மரமானது தன்னிடம் படகு எதுவும் இல்லை என்றும் தன்னுடைய உடற்பகுதியான மரத்தை வெட்டி எடுத்து குடைந்து ஒரு படகை செய்து ஓய்வெடுக்கச் செல் என்று கூறியது.
          அவன் மரத்தின் உடற்பகுதியை வெட்டி எடுத்து மகிழ்ச்சியுடன் சென்றான். சில வருட காலம் அவனை காணவில்லை. பல வருடங்களுக்குப் பின் மீண்டும் மரத்தின் அடியில் வந்து அமர்ந்தான். அப்போதும் சோகமாகத் தான் இருந்தான். மரம் இப்போது அவனுக்கு கொடுக்க எதுவுமில்லாமல் இருக்கும் நிலையைக் கண்டு தனக்குள் வருந்தியது. தன்னிடம் அவனுக்கு கொடுக்க மாம்பழம் எதுவுமே இல்லை என்று வருந்தியது. வயதானவரோ தனக்கு பல் இல்லாததால் மாம்பழம் சாப்பிட முடியாது என்று பதிலளித்தார். அவருக்கு கொடுக்க கிளைகளும் இல்லை. என்னுடைய தடித்த உடற்பகுதியையும் உனக்கு தந்து விட்டேன். என்னிடம் தற்போது இருப்பது இந்த வேரோடு கூடிய அடிமரம் மட்டும் தான். உனது மீதமுள்ள காலங்களில் இந்த வேரில் சாய்ந்து ஓய்வெடுத்துக்கொள் என்றது மரம்.
          இந்த மரத்தைப் போல நம் வீட்டில் இருக்கும் சுயநலம் சிறிதும் இல்லாத ஒரு வடிவம் தான் அம்மா. அம்மாவை பற்றி கவிஞர் வைரமுத்து பின்வருமாறு கூறுகிறார்.
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்.
Previous Post Next Post