விவசாயி ஒருவருக்கு வயதான கழுதை ஒன்று இருந்தது. தன்னுடைய இளமையான வயதில் விவசாயிக்கு மிகுந்த
உதவியாக இருந்த அந்த கழுதை வயதான பின் விவசாயிக்கு பாரமாகவே இருந்தது. ஆனாலும் நெடுநாட்களாக தனக்கு உதவியாக இருந்த கழுதையை எதுவும் செய்யவும் அவருக்கு
விருப்பமில்லை. வயதான
கழுதையை பராமரிப்பது பாரமாக இருந்தாலும் பொறுத்துக்கொண்டார்.
ஒரு நாள் அந்த கழுதை ஒரு ஆழமான குழிக்குள் விழுந்து விட்டது. விவசாயி எவ்வளவு முயன்ற பின்னரும் அதை குழிக்குள்
இருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை. ஊரிலுள்ள சில ஆட்களை அழைத்து
வந்தார். அவர்களாலும் கழுதையை வெளியே கொண்டு வர இயலவில்லை.
அவர்கள் அனைவரும் பயன் தராத அந்த கழுதையை அந்த குழியிலே மண்ணைப் போட்டு
புதைத்துவிட கூறினர். விவசாயியும் கழுதை குழிக்குள் கிடந்து படும்
கஷ்டத்தை தாங்க இயலாதவனாய் கழுதையை உயிருடன் புதைக்க முடிவு செய்தான்.
விவசாயி ஒரு மண்வெட்டி எடுத்து கரையிலுள்ள மண்ணை வெட்டி கழுதையின்
மீது போட்டார். கழுதை ஒரு
நிமிடம் திகைத்தது. தன் மீது விழும் மண் தன்னை புதைத்துவிடபோகிறது
என்பதை உணர்ந்தது. பின்னர் சுதரித்துக்கொண்டது. தன் மீது விழுகின்ற மண்ணை வேகமாக உதறித்தள்ளியது. மண்
தன் மீது விழும்போது மிகுந்த வலியைக் கொடுத்தாலும், நிதானத்தோடு
தன் மீது விழுந்த மண்ணை உதறித்தள்ளியது.
உதறித்தள்ளி மண் கழுதையின் காலுக்கு அடியில் விழுந்துகொண்டு
இருந்ததால் மண் விழ விழ பள்ளத்தின் ஆழம் குறைந்துகொண்டே வந்தது. திரும்ப திரும்ப தன் மீது விழுந்த மண்ணை உதறித்
தள்ளியதால் சிறிது நேரத்தில் பள்ளம் நிரம்பி கழுதை பள்ளத்தை விட்டு வெளியே வந்தது.
தன்னை உயிரோடு புதைக்க வீசப்பட்ட மண்ணை உதறித்தள்ளி பள்ளத்தை விட்டு
வெளியே வந்த வயதான கழுதையின் முயற்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது.
வாழ்வின் மகத்துவம் முயற்சி செய்வதில் தான் இருக்கிறது. முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.
நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும்
சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே,
முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.
கொஞ்சம் பயிற்சியும் கொஞ்சம் முயற்சியும் இருந்தாலே பல சாதனைகளை
படைக்கமுடியும். இன்றிருக்கும்
நான் நேற்றிருந்த நான் - ஐ விட அறிவு, எண்ணம்,
படிப்பு, செயல், திறமை,
பழக்கம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன்
இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும். நாளைய நான் இன்றைய
நான் - ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும். தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால்
தேனின் சுவையை உணரவே முடியாது. அச்சத்தை உதறித்தள்ளி விட்டு முயற்சி
செய்தால் வெற்றி நிச்சயம்.முயற்சி முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது
வாழ்க்கையின் எல்லையும் குறுகிவிடும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும்.
