சுமார் எட்டு மணி இருக்கும்.அந்த ஊரின் பிரதானமாக இருக்கும் மருந்துக் கடைக்கு ஒருவர் வந்தார்.தனக்கு கணுக்காலில் இருந்து மூட்டு வரை தாங்கமுடியாத வகையில் வலியாக இருப்பதாகவும், மாடிப்படிகளில் ஏறும் போது வலியினால் அவதிப்படுவதாகவும் கூறினார். மேலும் அவர் வேலைக்குச் செல்லும் போது கூட கால் வலியினால் வேலை செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து அவர் கூறியது தான் மிகுந்த அதிர்ச்சிக்குரியதாக் இருந்தது.
“அண்ணே இந்த வலியை குறைக்க மாத்திரை ஏதாவது இருக்கிறதா? “ என்று அவர் கேட்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்தாம் வகுப்பு பயின்று விட்டு 3 வருடம் மருந்தாக்கவியல் பயின்ற மருந்துகளின் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு மருந்தாளுனரிடம் தன்னுடைய கால் வலிக்கு எந்த விதமான சோதனைகளையும் செய்துகொள்ளாமல் மருந்தை கேட்கிறார். இதை விட ஆச்சரியம் அந்த மருந்தாளுனரின் பதில். “மாத்திரை இருக்குறது. உங்களுக்கு ஒரு வேளை வேண்டுமா? அல்லது இரு வேளை வேண்டுமா? “ என்று கேட்கிறார். வந்தவரோ “எனக்கு நான்கு வேளை தாருங்கள். வலி குறையும் தானே?” என்று கேட்டார். மருந்தாளுனரோ “ கண்டிப்பாக குணமாகி விடும். நான்கு நேரம் சாப்பிட்டால் உங்களுக்கு வலியே இருக்காது” என்று நம்பிககையோடு மருந்தை கொடுக்கிறார்.
இது போன்ற நிகழ்வுகள் அனைத்து மருந்தகங்களிலும் தினந்தோறும் நடைபெறுகிறது. காய்ச்சல், தலைவலி க்கு மருந்து கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் தற்போது அல்சர், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்று எந்த வித நோய்களுக்கும் மருந்து தர அவர்கள் தயாராக இருக்கின்றனர். ஒரு நோய் வரும்போது அந்த நோய்க்கான காரணத்தை தெரிந்து கொண்ட பின்னரே அந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்தை கொடுக்கவேண்டும். நோய்க்கான காரணத்தை முறையாக பயின்ற மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க இயலும். மருந்தாளுநர்களால் நோய்க்கான காரணத்தை சரியாக கண்டுபிடிக்க இயலாது. மருத்துவர்களின் அறிவுரையின்றி சாப்பிடும் மருந்துகள் சில நேரங்களில் உங்கள் உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம்.
