பள்ளிகூடம் போகிற வழியில் இருந்த அந்த தோட்டத்தில்
பாம்பு ஒன்று இருந்தது. அந்த வழியாக பள்ளிக்கு செல்லுகின்ற குழந்தைகள் பாம்பைக்
கண்டு பயந்தனர். சில நேரங்களில் பாம்பை தெரியாமல் மிதித்த குழந்தைகளை அது கடிக்கவும்
செய்தது. அந்த தோட்டத்தில் இன்னொரு பக்கத்தில் வசித்து வந்த ஒரு துறவியிடம் குழந்தைகள்
சென்று பாம்பு தங்களை கடிப்பது பற்றி முறையிட்டனர்.
துறவி பாம்புக்கு
தீட்சி அளித்தார். பாம்பின் வீரியம் அடங்கியது.
பாம்பு சாதுவாகிவிட்டது. இப்போது சிறுவர்கள்
பாம்பின் மீது கல் எறிய ஆரம்பித்தனர். பாம்பு சிறுவர்களுக்கு பயந்து மறைந்து வாழ்ந்தாலும்
சிறுவர்கள் அதை தேடி வந்து கல்லால் அடித்தனர். ஒருமுறை துறவி அந்த வழியாக நடந்து வரும்போது
மிகுந்த காயத்துடன் பாம்பு வழியில் கிடந்தது. துறவி பாம்பிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார்.
நீங்கள் தானே எனக்கு தீட்சி அளித்தீர்கள். என்னால் கடிக்க முடியாததால் குழந்தைகள் என்னை கல்லால் அடிக்கிறார்கள் என்று கூறியது.
அதற்கு
துறவி “உன்னை கடிக்க வேண்டாம் என்று தானே கூறினேன். உனக்கு சீறக்கூட தோன்றவில்லையா?” என்று கேட்டார்.
அடுத்தவர்களுக்கு
தீங்கு நேருமோ என்று சிலநேரம் நம்மை தற்காத்துக் கொள்ள
தெரியாத முட்டாளாய் இருக்கிறோம். நமக்கு தீங்கு வரும் என்று தெளிவாகத் தெரியும் போது
அதை எதிர்த்து சீறுவதற்காகவாவது தெரிந்திருக்கவேண்டும்.
திரும்ப திரும்ப குனிந்து குட்டு வாங்குபவர்களை சற்று நிமிர்ந்து
சீறிப் பாருங்கள்
குட்டுபவர்கள் உங்கள் முன்னால் இருக்கமாட்டார்கள்.
