கண்டம் விட்டு கண்டம்
தாண்டி 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை தூரம் பாய்ந்து எதிரி இலக்குகளை துவம்சம் செய்யும்
திறன் படைத்த அக்னி , 5 அணு ஏவுகணை, ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இதன்மூலம், இந்த ஏவுகணையை தயாரிக்கும் திறன் படைத்த அமெரிக்கா உள்ளிட்ட 4 வல்லரசு நாடுகளின்
பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
இந்திய
ராணுவத்துக்கு தேவையான ஏவுகணைகள், போர் விமானங்கள் போன்றவற்றை ராணுவ ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை படைத்து வருகிறது. முப்படைகளுக்கு
தேவையான ஆகாஷ், பிருத்வி, அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளை ஏற்கனவே தயாரித்துள்ளது. தற்போது,
இவற்றின் தாக்குதல் தூரத்தையும், தாக்குதல் திறனை அதிகரிக்கும் சோதனைகளில் அது ஈடுபட்டு
வருகிறது.
இந்த
வகையில், 5 ஆயிரம் கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை கண்டம் விட்டு கண்டம் சென்று துல்லியமாக
தாக்கும் திறன் கொண்ட அக்னி ,5 அணு ஏவுகணையை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் முதன்முறையாக தயாரித்துள்ளனர்.
17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலத்துடன் 3 அடுக்குகளை கொண்ட இந்த ஏவுகணை, திட எரிபொருளில்
இயங்க கூடியது. 50 ஆயிரம் கிலோ எடை கொண்ட இது, 1,100 கிலோ அணு குண்டை சுமந்து சென்று
தாக்கும் வல்லமை கொண்டது.
ஒடிசா
மாநிலம் வீலர் தீவில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் அக்னி ,5 ஏவுகணை நேற்று முன்தினம்
இரவு 7 மணிக்கு சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான கவுன்ட் டவுனும்
தொடங்கியது. ஆனால், அடிக்கடி ஏற்பட்ட மின்னல் மற்றும் மோசமான வானிலை காரணமாக கடைசி
நேரத்தில் சோதனை கைவிடப்பட்டது. இந்த சோதனை நேற்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி,
வீலர் தீவில் இருந்து நேற்று காலை 8.07 மணிக்கு அக்னி, 5 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
வீலர் தீவில் இருந்து சரியான பாதையில் சென்ற ஏவுகணை, 600 கிலோ மீட்டர் உயரத்துக்கு
சீறிப் பாய்ந்து, அதன் பிறகு இலக்கை நோக்கி பாய்ந்து தாக்கியது. இதன் செயல்பாட்டை அதிநவீன
ரேடார்கள் மூலமாக அங்குலம் அங்குலமாக விஞ்ஞானிகள் கண்காணித்தனர். மேலும், 3 போர்க்கப்பல்கள்
ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, ஏவுகணை செல்லும் திசை கண்காணிக்கப்பட்டது.
இதையடுத்து,
சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது. டிஆர்டிஓ தலைவரும் ராணுவ அமைச்சரின்
அறிவியல் ஆலோசகருமான வி.கே.சரஸ்வத், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் சோதனையை நேரில்
பார்வையிட்டனர். ஏவுகணை சோதனை வெற்றியை விஞ்ஞானிகளும் ராணுவ அதிகாரிகளும் ஒருவருக்கொருவர்
வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
அக்னி
5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது இந்தியாவின் பாதுகாப்பிலும் ஏவுகணை வரலாற்றிலும்
மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஏற்கனவே, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய
நாடுகளிடம் மட்டுமே இதேபோன்ற ஏவுகணை உள்ளது. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும்
இப்போது இடம் பிடித்துள்ளது.
கண்டம்
விட்டு கண்டம் இதுவே முதல் முறை. ஒடிசா மாநிலத்துக்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில்
10 கிமீ தொலைவிலும், சாந்திபூருக்கு தெற்கே 70 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள வீலர் தீவு,
2 கிமீ நீளமும் 390 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. இங்கு ஏற்கனவே ஆகாஷ், பிருத்வி, சூர்யா,
அக்னி வரிசை ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. எனினும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை, இப்போதுதான் இந்தியாவில்
முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.
