முல்லாவுக்கு படகுப் பயணம் மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் படகில் பயணம் செய்வார். ஒருமுறை தன்னுடைய பிரியமான மனைவியுடன் படகில் பயணம் செய்த போது திடீரென புயல் அடித்தது. படகு பயங்கரமாக தத்தளித்தது. படகில் பயணம் செய்தவர்கள் படகில் இருந்த அனைவரும் முகத்திலும் மரண பயம். முல்லாவின் மனைவியும் அவர்களோடு சேர்ந்து பயத்தில் கூச்சலிட்டனர். முல்லா மட்டும் பயமில்லாமல் இருந்தார்.
முல்லாவின் மனைவி முல்லாவிடம் ‘உங்களுக்கு பயமே இல்லையா ?’ என்று கேட்டார். திடிரென முல்லா கத்தி ஒன்றை எடுத்து மனைவியை குத்தச் சென்றார். மனைவி பயப்படவேயில்லை.
கத்தியை கண்டு பயமே இல்லையா? என்று மனைவியிடம் முல்லா கேட்டார். கத்தி வேண்டுமானால் கூர்மையான ஆயுதமாக இருக்கலாம். ஆனால் கத்தியை பிடித்திருப்பவர் என் அருமை கணவர். என் மீது எல்லையற்ற பிரியம் கொண்டவர்.
அந்த பதிலைக் கேட்டு சிரித்த முல்லா, ‘உன்னைப் போலவே நானும் நினைக்கிறேன். எந்த அலைகள் வேண்டுமானால் ஆபத்தானவைகளாக இருக்கலாம். ஆனால் அதை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இறைவனோ அன்புமயமானவர். நம்மை அவர் பத்திரமாக பார்த்துக்கொள்வார். அதனால் எனக்கு புயலைக் கண்டு அச்சமில்லை’ என்றார்.
