13.04.2011 அன்று தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாநிலத்தில் 75லிருந்து 80 சதம் வரை வாக்குக்கள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது 2009 ஆண்டு தொகுதி சீரமைப்புக்குப்பின் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல். இத்தேர்தலில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினர் வீதம் 234 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவற்றுள் 188 பொதுத் தொகுதிகள், 46 தனித் தொகுதிகள்.
தேர்தல் அட்டவணை
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய தேதி - மார்ச் 19
மனுத் தாக்கல் செய்த கடைசி நாள் - மார்ச் 26
மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நாள் - மார்ச் 28
மனுக்களை திரும்ப பெற்ற கடைசி நாள் - மார்ச் 30
வாக்குப் பதிவு நடைபெற்ற நாள் - ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - மே 13
2011 சட்டமன்றத் தேர்தலில் இரு பெரும் கூட்டணிகள் களத்தில் இருந்தன. திமுக தலைமையிலான கூட்டணியில காங்கிரசு, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முசுலீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு ப்ளாக், இந்திய குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்றவை இடம் பெற்றிருந்தன.
இவ்விரு கூட்டணிகள் தவிர பாஜக - ஜனதா கட்சிக் கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டது. வேறு சில சிறிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு சிக்கலினால் முன்பு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக அக்கூட்டணியில் இருந்து விலகியது; மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது.
காலையிலிருந்தே மக்கள் தங்களுடைய ஓட்டை பதிவு செய்ய 7 மணியிலிருந்தே காத்திருந்தனர். தேர்தல் கமிஷனின் ஓட்டுப்போட வாங்க, ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்க என்றும் அழைப்பு விடுத்ததற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளனர். முதன்முதலாக வாக்குப் பதிவுக்கு தகுதியானவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். நடக்க இயலாத வயதானவர்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர். மூன்று வருடமாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வரும் ஒருவரை அவருடைய மனைவி வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து தங்களின் ஜனநாயக கடமையை நிரூபித்தது மக்கள் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. வெற்றி பெறும் அரசியல் தலைவர்கள் மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
