கட்டுப்பாடுகள் தேவையா?

அரசன் ஒருவன் உண்மையிலேயே உணவிலே முழுவதுமாய் திருப்தி அடைந்த ஒரு ஆட்டை எந்த குடியானவராவது கொண்டு தன் முன் கொண்டு நிறுத்தினால் தக்க பரிசு தருவதாக அறிவித்திருந்தான்.
நாடு முழுவதுமுள்ள குடியானவர்கள் தங்கள் ஆடுகளுக்கு வேண்டுமளவுக்கு உணவு அளித்து கொழுக்கச் செய்தார்கள். தேடி தேடி சிறந்த உணவுகளை ஆடுகளுக்கு அளித்தார்கள். குறிப்பிட்ட நாளில் அனைத்து ஆடுகளும் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டன. அவைகள் திருப்தியாய் இருக்கிறதா என்று அரசரால் சோதிக்கப்பட்டது. பெரும்பாலான ஆடுகள் தின்று கொளுத்திருந்தாலும் அவைகளின் மூக்குக்கு நேராக பச்சை பசேலென்ற புற்களை காண்பித்த போது அவைகள் தன் வசம் இழந்தன. இதுவரை உணவையே கண்டிராதவைகளைப் போல அந்த கொளுத்த ஆடுகள் பாய்ந்து பாய்ந்து புற்களை தின்ன ஆரம்பித்தன.
கூட்டத்தில் ஒரு நோஞ்சான் ஆடு இருந்தது. புல்லை காட்டியதும் புல்லை நோக்கிச் சென்றது. புல்லை சாப்பிடுவதற்கு முன் தன் எஜமானை பார்த்தது. எஜமான் தன் கழியை மெதுவாக உயர்த்தினார். ஏற்கனவே பழக்கப்படுத்தி வத்திருந்த நோஞ்சான் ஆடு புல்லை சாப்பிடாமல் சென்று விட்டது. அந்த நோஞ்சான் ஆட்டிற்கு அரசரின் பரிசு கிடைத்தது.
நமது புலன்கள் இந்த ஆடுகள் போன்றது. எவ்வளவு தான் அனுபவித்தாலும் திருப்தியடைவதில்லை. இந்த உலகத்தில் உற்பத்தியாகும் அனைத்து ஐஸ்கிரீம்களை நாம் சாப்பிட்டிருந்தாலும் இன்னமும் கொஞ்சம் கூட கிடைத்தால் நல்லது என்று தான் மனம் கேட்கும். 10,000 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவனுக்கு 50,000 ரூபாய் சம்பளமாகப் பெற்றாலும் இன்னும் கொஞ்சம் கூட கிடைக்க மனம் இயங்கும். வாழ்வில் இன்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாலும் மனம் அந்த எல்லையை விரிவு படுத்தவே விரும்பும்.

கட்டுப்பாடுகள் ஆட்டு எஜமானின் கையிலிருந்த கழியைப் போன்றது. கட்டுப்பாடுகள் எல்கைகளை தொட வைக்காவிட்டாலும் புலன்களை முழுமையாக திருப்தியடைய வைக்கும். நம் பகுத்தறிவை பயன்படுத்தி நாம் நம் மீது உருவாக்கிக் கொள்ளும் கட்டுப்பாடுகள் நம்மை கண்டிப்பாக திருப்தியடைய வைக்கும். கட்டுப்பாடுகள் வாழ்வின் சிக்கல்களை ஒழுங்குபடுத்தும். ஒழுங்குபடுத்தப்படும் செயல்கள் வாழ்க்கையை அழகாக்கும். அழகு செயல்பாட்டை ரசிக்க வைக்கும். அழகிய ரசனை நம்மை திருப்தியடைய வைக்கும்.
Previous Post Next Post